மண்ணை பொன்னாக்கிய ஹிட்லர்
|
திரு. ஹிட்லர்
சத்திரப்பட்டி
மதுரை மாவட்டம் தொடர்புக்கு-98945 9842
|
|
மதுரை மாவட்டம் சத்திரப்பட்டி பெரியபட்டியை சேர்ந்த முன்னாள் கப்பல்படை வீரர் ஹிட்லர். 53 வயதான இவர் 15 ஆண்டுகள் கப்பல்படையில் பணிபுரிந்தார். பின் விருப்ப ஓய்வில் சொந்த ஊருக்கு வந்தார். கப்பல்படை பணியில் கிடைத்த பணப் பலன்களை பாழாக்காமல் ஐந்து ஏக்கர் வாங்கி மண்ணைப் பொன்னாக்கினார். விவசாயம் பற்றி துளியும் தெரியாத ஹிட்லர் படிப்படியாக விவசாயப் பணிகளை குறுகிய காலத்தில் ஆர்வத்துடன் கற்றுத் தேர்ந்தார்.
நெல், கரும்பு சாகுபடிக்கு கூடுதல் தண்ணீர் தேவை. மல்லிகைப்பூ சாகுபடிக்கு கூடுதல் பணியாளர் தேவை என்பதால், சொட்டுநீர் பாசனம் மூலம் குறைந்த நீரில் அதிக மகசூல் தரும் பட்ரோஸ் விவசாயத்தில் ஹிட்லர் களம் இறங்கினார். இவரது ஆர்வத்துக்கு தோட்டக் கலைத்துறை நேசக்கரம் நீட்டியது. 50 சதவிகித மானியத்தில் சொட்டு நீர் பாசனம் அமைக்க உதவியது. தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக பட்ரோஸ் உற்பத்தியில் மதுரை மாவட்ட அளவில் சாதனை விவசாயியாக திகழ்கிறார்.
ஹிட்லர் கூறியதாவது: விவசாயம் பற்றி துளியும் எனக்கு தெரியாது. கப்பல்படையில் கிடைத்த பணம் முழுவதையும் விவசாயத்தில் முதலீடு செய்ய எண்ணினேன். 20 ஆண்டுகளுக்கு முன்பு ஐந்து ஏக்கர் நிலம் வாங்கி பண்படுத்தினேன். தோட்டக்கலைத்துறை மானியத்துடன் 70 சென்டில் "நிழல்வலை' அமைத்து பட்ரோஸ் வளர்த்து வருகிறேன். மேற்கு வட்டார வேளாண் துறையினர் மூலம் மண் புழு மற்றும் இயற்கை உரம் மட்டுமே பயன்படுத்தி வருவதால் சாகுபடி அதிகரித்து வருகிறது.
பட்ரோஸ் செடியை நடவு செய்து மூன்றாவது மாதம் முதல் எட்டு ஆண்டுகள் வரை தொடர்ந்து பலன் கொடுக்கும். ஒன்றரை ஆண்டுகளுக்கு பின் செடிகளுக்கு கவாத்து செய்ய வேண்டும். மல்லிகைப்பூ விவசாயத்தை விட பட்ரோஸ் விவசாயத்தில் பராமரிப்பு குறைவு. நாள் ஒன்றுக்கு எட்டு முதல் பத்து கிலோ வரை பட்ரோஸ் கிடைக்கும். சாதாரணமாக கிலோ ரூ.70 வரை போகும். முகூர்த்த நாட்களில் ரூ.150 வரை விற்கும். குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரும் ஒரே தொழில் பட்ரோஸ் வளர்ப்பு தான்,'' என்றார்.
|